மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் நர்சு உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா


மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் நர்சு உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 April 2020 5:30 AM IST (Updated: 25 April 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி நர்சு உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரையை சேர்ந்த 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். 2 பேர் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 3 பேரும் வெளியூர் சென்று வந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவருகிறது. அதன் மூலம் இவர்கள் 3 பேருக்கும் பரவியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நர்சு

இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றிய 47 வயது நர்சு ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர். ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 3 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்தது.

பரமக்குடியில் 2 பேர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து இருவரின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சுகாதார துறையினரும், போலீசாரும் அவர்களது வீடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட இருவரையும் தனித்தனியே ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். மேலும் அவர்களது குடும்பத்தினரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதுதவிர அந்த பகுதிகள் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், குன்னூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வரும் 33 வயது பெண், ராஜபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சென்றிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வசித்து வந்த குன்னூர் கிராமம் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வேலை செய்யும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் 25 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

Next Story