மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் உயிரிழப்பு - மதுரையில் கொரோனாவுக்கு 2-வது பலி


மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் உயிரிழப்பு - மதுரையில் கொரோனாவுக்கு 2-வது பலி
x
தினத்தந்தி 25 April 2020 4:45 AM IST (Updated: 25 April 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர் ஒருவரின் தாயார் கொரோனா தொற்றுக்கு ஆளானார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதனால் மதுரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2-ஆனது.

மதுரை,

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி கொரோனா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த 56 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேரும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மதுரையில் 28 பேரும், விருதுநகரில் 10 பேரும் என மொத்தம் 38 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதான கட்டிட காண்டிராக்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் பரிதாபமாக இறந்து போனார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நடந்த முதல் உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.

இந்த நிலையில் மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாரான 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்து போனார். இதன்மூலம் மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆனது.

இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் உடல் டாக் டர்கள் முன்னிலையில் பல்வேறு ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் மூலம் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் தத்தனேரி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அப்போது மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “சில தினங்களாகவே இந்த மூதாட்டிக்கு காய்ச்சல், வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை இருந்துள்ளன. இந்த நிலையில் 21-ந் தேதி அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. ஆனால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் அவருக்கு 2-வதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில்தான் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினை இருந்த காரணத்தினாலும், வயது முதிர்வின் காரணமாகவும் அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது. இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் அவர் பரிதாபமாக இறந்து போனார்” என்று கூறினர்.

பட்டரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுபோல் அவர் வசித்த மேலமாசி வீதியில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story