கருமந்துறையில் ஒருவருக்கு கொரோனா: சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு


கருமந்துறையில் ஒருவருக்கு கொரோனா: சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

கருமந்துறையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து, நேற்று அங்கு சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

பெத்தநாயக்கன்பாளையம், 

கருமந்துறை வடக்கு நாடு ஊராட்சிக்குட்பட்ட வலசை வளவு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து வலசை வளவு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 20 கிராமங்களின் எல்லைகள் மூடப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் யாருக்காவது உள்ளதா? என பரிசோதனை செய்தனர். மருத்துவ குழுவினர் முக கவசம் உள்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சிலரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சேலம் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆர்.கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் நேற்று கருமந்துறையில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பணிகள், சுகாதார பணிகள் போன்றவற்றை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கொரோனா தொற்று தடுப்பு பணி சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து ஒலிபெருக்கி, தண்டோரா மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது, அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பது, பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா? என்பது குறித்த விவரங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், கூடுதல் இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், துணை கமிஷனர் தங்கதுரை உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story