சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை


சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 24 April 2020 11:30 PM GMT (Updated: 24 April 2020 9:29 PM GMT)

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்க 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் இதுவரை 29 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் பூரணமாக குணமடைந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கவும், நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் சேலம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும்.

எனவே அந்த நாட்களில் கடைகளும், சந்தைகளும் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்படும். இந்த முழு ஊரடங்கு நாட்களில் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதாவது சிறு கடைகள் முதல் பெரிய கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும், காய்கறிகள், வார சந்தை, உழவர் சந்தைகள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள், ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இன்று முதல் 2 நாட்களுக்கு முழுமையாக மூடப்பட வேண்டும்.

இந்த முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம். தடையை மீறி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்பவர்களோ? வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இது தவிர அந்த நபர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா வைரஸ் உள்ளதா? என பரிசோதனை செய்யப்படும்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதல் முறையாக ரூ.100 அபராதமும், அதே நபர் 2-வது முறையாக முக கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவருக்கு ரூ.500 அபராதமும், அதே நபர் 3-வது முறையாக முக கவசம் அணியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படுவார்.

மேலும் காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரம், நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சலூன் கடைகள் திறக்கக்கூடாது.

பொதுமக்களும் சலூன் கடைகளிலோ, கிராமங்களில் பொது இடங்களில் தனியாக சென்று முடி திருத்தம் செய்து கொள்ளுதல், முக சவரம் செய்தல் போன்றவைகள் மேற்கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் வைரஸ் நோய் தொற்று எளிதில் பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த முழுமையான ஊரடங்கிற்கு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 28-ந் தேதி இரவு 9 மணி வரை முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story