சக்கரக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு


சக்கரக்கோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம், 

சக்கரக்கோட்டை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து களஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் செல்லாத வகையில் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், தாசில்தார் முருகவேல் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story