ஊரடங்கால், வருமானம் இழந்த பெண்கள் நிவாரணம் கேட்டு நீண்ட வரிசையில் நின்று நூதன போராட்டம்


ஊரடங்கால், வருமானம் இழந்த பெண்கள் நிவாரணம் கேட்டு நீண்ட வரிசையில் நின்று நூதன போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், கூலி வேலை செய்யும் பெண்கள் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

நாகப்பட்டினம், 

நாகையில், கூலி வேலை செய்யும் பெண்கள் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

ஊரடங்கால் வருமானம் இழப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு தினந்தோறும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இவர்கள் அனைவரும் கடந்த ஒரு மாதமாக தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். ஒரு நாள், இரு நாள் அல்ல ஒரு மாதமாக இவர்கள் அனைவரும் வருமானம் இல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டு வேலை, குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்வது உள்ளிட்ட கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நாள் முதல் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வருமானம் இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நூதன போராட்டம்

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு இவர்கள் அனைவரும் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story