ஊரடங்கின்போது திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்றபோது பெண் போலீஸ் தாக்கியதாக புகார்


ஊரடங்கின்போது திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்றபோது பெண் போலீஸ் தாக்கியதாக புகார்
x
தினத்தந்தி 25 April 2020 4:36 AM IST (Updated: 25 April 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கின்போது திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்றபோது பெண் போலீசார் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளனர்.

திருப்பனந்தாள்,

ஊரடங்கின்போது திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்றபோது பெண் போலீசார் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளனர்.

காதல்-எதிர்ப்பு

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள அணைக்கரையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நதியா(வயது22). இந்த ஊரை ஒட்டி உள்ள அரியலூர் மாவட்டம் வடவாறு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(23). இவர்கள் இருவரும் திருப்பனந்தாளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக சேர்ந்து படித்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருண்குமார் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

ஊரடங்கில் திருமணம்

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அருண்குமார் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 19-ந் தேதி நதியாவை வீட்டில் இருந்து அழைத்துக்கொண்டு அணைக்கரை வெள்ளி ஆண்டவர் கோவிலிலுக்கு சென்ற அருண்குமார், கோவில் பூட்டிக்கிடந்ததால் கோவில் முன்பு நதியாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தை முடித்துக்கொண்ட காதல் ஜோடியினர் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

நீதிபதி உத்தரவு

பின்னர் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகனிடம் நீலப்புலிகள் இயக்கத்தினர் இதுகுறித்து முறையிட்டனர். இதனையடுத்து காதல் தம்பதியை கோர்ட்டில் ஒப்படைக்க திருப்பனந்தாள் போலீசாருக்கு, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் காதல் ஜோடியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நதியா, நான் அருண்குமாரோடுதான் வாழ்வேன் என்று கூறினார். இதனையடுத்து அவரை அருண்குமாரோடு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பெண் போலீஸ் மீது புகார்

இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், தன்னையும் தனது மனைவியையும் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பனந்தாள் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story