ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததால் நடந்தே வீடு திரும்பிய கர்ப்பிணிகள் - போடியில் பரபரப்பு


ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததால் நடந்தே வீடு திரும்பிய கர்ப்பிணிகள் - போடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2020 4:45 AM IST (Updated: 25 April 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

போடியில் கர்ப்பிணிகள் சென்ற ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ததால், அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போடி, 

போடி சுப்புராஜ்நகரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி அபர்ணா (வயது 20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் அவ்வப்போது போடி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஒரு ஆட்டோவை சவாரிக்காக அழைத்து அபர்ணா, தனது தாயுடன் பரிசோதனை செய்வதற்காக போடி அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் சென்ற ஆட்டோ போடி மார்க்கெட் பகுதியில் வந்தபோது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தினர். பின்னர் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் வந்த அபர்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவரிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். முன்னதாக அதில் வந்த கர்ப்பிணி அபர்ணாவையும், அவரது தாயையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக போலீசார் கூறி, அவர்களை காத்திருக்க வைத்தனர். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் அவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த 2 பேரும், தாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் போடி அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்து அபர்ணாவும், அவரது தாயும் சுப்புராஜ்நகரில் உள்ள வீட்டிற்கு சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்.

இதேபோல் போடி நந்தவன தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கார்த்திகா (32). இவரும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் போடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க உள்ளதால், கொரோனா தொற்று உள்ளதா என அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்காக நேற்று கார்த்திகா தனது தாயுடன், போடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவர்களை பக்கத்து வீட்டை சேர்ந்த முரளி என்பவர் தனது சொந்த ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு பரிசோதனைக்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறியதால் முரளியை வீட்டிற்கு செல்லுமாறு கூறி கார்த்திகா அனுப்பி வைத்தார். பரிசோதனை முடிந்து கூப்பிடும்போது வர வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே பரிசோதனை முடிந்து அழைத்து செல்வதற்காக முரளியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா வரவழைத்தார். அப்போது அவர் மருத்துவமனை நோக்கி வந்தபோது, மூன்றுராந்தல் திருவள்ளுவர் சிலை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால் ஆட்டோ வரும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த கார்த்திகாவும், அவரது தாயும் வீட்டிற்கு பரிதவிப்புடன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திகா வீட்டுக்கு ஆட்டோவில் தான் சென்றார் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story