ஊரடங்கால் ஓட்டல், கடைகள் மூடல்: உணவு கிடைக்காமல் அலைந்து திரியும் தெருநாய்கள்
ஊரடங்கால் ஓட்டல், கடைகள் மூடப்பட்டுள்ளதால் தெருநாய்கள் உணவு கிடைக்காமல் அலைந்து திரிகின்றன.
தேனி,
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. தெருநாய்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாததால் அவற்றின் எண்ணிக்கை பெருகி உள்ளன. முக்கிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் உலா வருகின்றன. ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவுகள், இறைச்சி கழிவுகள், திருமண மண்டபங்களில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் போன்றவற்றில் இரைதேடி கொண்டு இந்த நாய்கள் உலா வந்தன.
சாலையோர தள்ளுவண்டி கடைகளில் இருந்து வீசப்படும் எலும்பு துண்டுகள், மீதமாகும் உணவுகளை எதிர்பார்த்து சாலைகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரியும். இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கடைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தெருநாய்கள் உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. அவை யாராவது உணவு அளிக்கமாட்டார்களா? என தெரு தெருவாக அலைந்து திரிகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் தெருநாய்களுக்கு உணவு அளிக்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதுபோல், தேனி மாவட்டத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தெருநாய்கள் இதே பசியோடு திரியும்பட்சத்தில் அவைகள் மக்களை துரத்தி கடிக்கும் அபாயமும் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story