புதிய ரேஷன் கார்டுக்கு வீடுதேடி சென்று விண்ணப்பங்கள் பெறப்படும் - கலெக்டர் தகவல்
புதிய ரேஷன் கார்டுக்கு வீடுதேடி சென்று விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி,
தேனி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கலாம். புதிய ரேஷன் கார்டு பெற தகுதியுடைய விண்ணப்பதாரரின் குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். ஆதார் கார்டு எண், செல்போன் எண் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனி சமையல் அறையுடன் கூடிய தனி முகவரியில் வசிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகத்துக்கோ, இ-சேவை மையங்களுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.
விண்ணப்பங்களை மக்களிடம் வீடு தேடிச் சென்று பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரிகளை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தாலே, கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை பெற்று விண்ணப்பித்து கொடுக்கப்படும். எனவே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தேனி தாலுகாவை சேர்ந்தவர்கள் 04546-255133, பெரியகுளத்துக்கு 04546-231215, ஆண்டிப்பட்டிக்கு 9445000332, உத்தமபாளையத்துக்கு 04554-265226, போடிக்கு 04546-280124 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story