ஊரடங்கால், குறைந்தது வேலை வாய்ப்பு: காய்கறி விற்கும் தொழிலுக்கு அதிகரிக்கும் மவுசு
ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் காய்கறி விற்கும் தொழிலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது.
கும்பகோணம்,
ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் காய்கறி விற்கும் தொழிலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது.
வேலை வாய்ப்பு குறைந்தது
கட்டிட வேலை, தச்சு வேலை, சிற்ப வேலை, வர்ணம் பூசும் வேலை, மின்சாதனங்களை பழுது நீக்கும் வேலை உள்பட பல்வேறு வேலைகளில் அன்றாடம் ஈடுபட்டு தினசரி தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்த ‘அன்றாடங்காய்ச்சிகளின்’ வாழ்வை கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.
ஊரடங்கு காரணமாக இத்தகையை வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால் தொழிலாளர்கள் பலர், குடும்பம் நடத்த பணமின்றி கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் காய்கறி விற்பது, பால் விற்பது, மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று கொடுப்பது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கான வேலைகளுக்கு திடீரென மவுசு அதிகரித்து காணப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள், பெயிண்டர்கள், ஓட்டல் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இன்று காய்கறி விற்பனையாளர்களாக மாறி விட்டனர்.
செலவை சமாளிக்க காய்கறி வியாபாரம்
காய்கறி வியாபாரத்துக்கு தடை இல்லை என்பதால் ஊரடங்கு கால செலவை சமாளிக்க கும்பகோணம் பகுதியில் பலர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் இரவு முழுவதும் இயங்கி வருகிறது. இரவு நேரத்தில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
காலை 5 மணிக்கு பிறகு மார்க்கெட் செயல்படுவது இல்லை. சில சில்லறை விற்பனை கடைகள் மட்டுமே இயங்குகின்றன. இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தையொட்டி புதிதாக காய்கறி வியாபாரத்தை தொடங்கி உள்ள பலர் தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதில் பலர் தெரு, தெருவாக சென்று தட்டு வண்டி மூலமாக காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கும்பகோணத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக காய்கறி விற்பனையில் இறங்கி உள்ளனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரத்தில் புதிதாக ஈடுபட்டு வரும் ஒருவர் கூறியதாவது:-
பெயிண்டர்
நான் பெயிண்டராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஒரு மாதமாக வேலையில்லாமல் எனது குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். இந்த நிலையில் காய்கறி விற்பனை தொழிலுக்கு மாறி உள்ளேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை வருமானம் கிடைக்கிறது.
பெயிண்டிங் தொழில் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.700 வரை கிடைக்கும். கொரோனா நோய் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story