நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 25 April 2020 7:42 AM IST (Updated: 25 April 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஷில்பா ஆலோசனை நடத்தினார்.

நெல்லை, 

நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஷில்பா ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம்.

தமிழக முதல்-அமைச்சரும் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி, நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பொதுமக்கள் உதவ வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர்கள் பூரண குணமடைந்து பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து செயல்படுத்த அனைத்து அலுவலர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் அரசின் உத்தரவுகளை கடைபிடித்து கொரோனாவை விரட்ட உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Next Story