சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் கை கழுவ நவீன எந்திரம் நெல்லை மாநகராட்சி ஏற்பாடு


சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் கை கழுவ நவீன எந்திரம் நெல்லை மாநகராட்சி ஏற்பாடு
x
தினத்தந்தி 25 April 2020 8:03 AM IST (Updated: 25 April 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் கை கழுவ நவீன எந்திரங்களை நெல்லை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

நெல்லை, 

சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் கை கழுவ நவீன எந்திரங்களை நெல்லை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நெல்லை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள், தெருக்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

நவீன எந்திரம்

கிருமி நாசினி தெளிப்பதற்கு பல்வேறு புதிய எந்திரங்களை மாநகராட்சி நிர்வாகம் வரவழைத்து பயன்படுத்தி வருகிறது. இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணியாளர்கள் கைகளை சுத்தமாக கழுவுவதற்கும் நேற்று 20 புதிய நவீன எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இவை 4 மண்டலங்களிலும் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரத்தில் ஒரு பகுதியில் கை கழுவும் திரவமும், மற்றொரு பகுதியில் தண்ணீர் குழாயும் இணைக்கப்பட்டு உள்ளது.

காலால் மிதித்தால்...

இதற்கான நல்லிகளை கையால் தொடாமல், கீழே இடதுபக்கம் பொருத்தப்பட்டு உள்ள பிஸ்டனை காலால் மிதித்தால் கை கழுவும் திரவம் வரும், அதனை கையில் தேய்த்து விட்டு, வலது பக்கம் பொருத்தப்பட்டுள்ள பிஸ்டனை அழுத்தினால் கோப்பையில் தண்ணீர் வந்து விழும். அதில் கைகளை சுத்தமாக கழுவலாம். இதன்மூலம் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஒருவர் பயன்படுத்திய பொருளை மற்றொருவர் தொடாமல் சுகாதாரமாக இருக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் இந்த எந்திர செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் என்ஜினீயர்கள், தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story