ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் செங்கல் சூளைகள் செயல்பட தொடங்கின


ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் செங்கல் சூளைகள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 25 April 2020 9:29 AM IST (Updated: 25 April 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஊரடங்கினால் பெரிய தொழில்கள் மட்டும் இன்றி சிறிய அளவிலான தொழில்கள், குடிசை தொழில்களும் ஒட்டுமொத்தமாக முடங்கி போய் உள்ளன. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால் செங்கல் சூளைகளும் மூடப்பட்டன.

திருச்சி அருகே காவிரி கரையில் உள்ள திருவளர்ச்சோலை, முல்லைக்குடி, சர்க்கார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுவது வழக்கம். செங்கல் தயாரிப்பு பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுவது உண்டு. ஊரடங்கினால் அவர்களும் வேலை இழந்து தவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழகத்தில் ஊரடங்கு கால கட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட பணிகள், சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள், குடிநீர், சுகாதார பணிகள், செங்கல் சூளை பணிகளுக்கு விலக்கு அளித்து அந்த பணிகளை செய்வதற்கான அனுமதி வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது.

ஊரடங்கில் இருந்து தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. மண்ணை குழைத்து அச்சுகளில் நிரப்பி அறுப்பது, பின்னர் அவற்றை சூளைகளில் வைத்து தீ மூட்டுவது போன்ற பணிகளை செய்ய தொடங்கினார்கள்.

இங்குள்ள செங்கல் சூளைகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செங்கற்களும் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் அவற்றை எங்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் செங்கல் அறுக்கும் பணி தொடங்கி இருப்பதால் செங்கற்களை லாரிகளில் ஏற்றி அனுப்புவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளனர்.

Next Story