பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டருக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கலெக்டர் அறிவிப்பு


பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டருக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 11:28 AM IST (Updated: 25 April 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார்.

பெரம்பலூர், 

பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார்.

எண்ணிக்கை அதிகரிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 4-வயது சிறுவன், போலீஸ் ஏட்டு உள்பட மொத்தம் 5 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட வி.களத்தூரை சேர்ந்த ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளான பாளையம், வி.களத்தூர் ஆகிய பகுதிகளும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கும், கல்லூரி மாணவருக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை மூச்சு திணறலால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது.

3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று இரவு அவசர செய்திக்குறிப்பினை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூரை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது. மேலும் மேற்காணும் தினங்களில் எவ்வித வாகன போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது. மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் செயல்படும் கடைகள் ‘சீல்‘ வைக்கப்படும். தடை காலத்தில் நடமாடும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story