இன்று முதல் 4 நாள் முழு ஊரடங்கு: சந்தை, கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - சமூக இடைவெளியை மறந்த மக்கள்
மதுரை மாநகரில் முழு ஊரடங்கை முன்னிட்டு சந்தைகள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை மறந்து நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை,
கொரோனா தொற்றை தடுப்பதற்காக மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 29-ந் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நாட்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மருந்து கடைகள் மற்றும் பாலகங்கள் தவிர மற்ற எந்த கடைகளும் திறக்கக்கூடாது. மளிகை கடைகள், தற்காலிக காய்கறி சந்தைகள் உள்பட எந்த அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கினர்.
ஒலி பெருக்கி
காய்கறி சந்தைகளில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று இருந்தனர். அதே போல் மளிகை கடைகள் மற்றும் அரிசி கடைகளில் பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து வாங்கினர். அதனால் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியவில்லை. போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ரோந்து சென்று ஒலி பெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்தப்படி இருந்தனர்.
போலீசார் நின்று இருந்த சந்தை பகுதிகளில் மட்டும் சமூக இடைவெளி கடை பிடிக்கப்பட்டது. மற்ற மளிகை கடைகளில் எங்கும் சமூக இடைவெளி கடை பிடிக்கவில்லை.
தற்போது ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகளும், சந்தைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் நேற்று அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 3 மணி வரை மக்கள் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story