செங்குன்றம் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 2 பேருக்கு வலைவீச்சு


செங்குன்றம் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 April 2020 4:30 AM IST (Updated: 26 April 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டி அம்மன் நகர், மொண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 34). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயா, சுரேந்தர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

உதயாவின் உடன்பிறந்த அக்காளுடன் ஆனந்தனுக்கு கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த உதயா, தனது அக்காள் உடனான கள்ளக்காதலை கைவிடும்படி ஆனந்தனிடம் பலமுறை எச்சரித்தார். ஆனாலும் அதை கேட்காமல் ஆனந்தன், கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரமடைந்த உதயா, தனது நண்பர் சுரேந்தருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். பின்னர் இது தொடர்பாக ஆனந்தனை கண்டித்த அவர், திடீரென அரிவாளால் ஆனந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு வலது கை மணிக்கட்டு மற்றும் இடது கை, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆனந்தனின் மனைவி ஜெனிபர் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பீட்டர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயா, சுரேந்தர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story