கொரோனா வைரஸ் தொற்று: பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பனைக்குளம்,
மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் 750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை தடுத்திடும் வகையில் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும் நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்திடவும், கண்டிப்பாக முககவசம் அணிந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது ராமநாதபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் இந்திரா, தாசில்தார் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story