ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுகிறார்கள்: இனிமேலும் இளைஞர்களுக்கு கருணை காட்ட முடியாது - கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது இனிமேலும் கருணை காட்ட முடியாது என கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 250 ஊராட்சிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிகள் ஆகியவற்றில் ஒரே நாளில் போர்க்கால அடிப்படையில் வீடுகளின் முகப்பு பகுதி மற்றும் சாலை தெருக்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் வைரஸை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை பொறுத்தவரை பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். ஆனால் ஒரு சில இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊரை சுற்றுவது கண்டிக்கத்தக்கது. இனிமேலும் அவர்கள் மீது கருணை காட்ட முடியாது. ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு பணிக்கு செல்ல முடியாது, வெளிநாட்டுக்கு செல்ல முடியாது. இதை அவர்கள் உணர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனாவை பொறுத்தவரை நாம் இன்னும் 2-வது நிலையில் தான் உள்ளோம். 3-வது நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறை அதிகாரிகளும் சோர்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு மே மாதத்துக்கு வழங்கவேண்டிய ரேஷன் பொருட்கள் அந்தந்த கடைகளுக்கு போய் சேர்ந்துள்ளன. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். 4-ந் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க வரவேண்டும். பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story