கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்


கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 26 April 2020 5:49 AM GMT (Updated: 26 April 2020 5:49 AM GMT)

கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி, 

கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வீடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, கறம்பக்குடி அருகே தீத்தானிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பதாகையை பிடித்துக்கொண்டு குடும்பத்தினரோடு கோஷம் எழுப்பினார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக ரூ.10,000 வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் வசூல் செய்வதை ஒராண்டிற்கு தள்ளிவைக்க வேண்டும். ஏழைமக்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு ரூ.5,000 வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை விவசாயத்திற்கு பயன்படுத்திட உத்தரவிட வேண்டும். கொரோனாவை தடுத்திட கிராமங்கள் உள்பட எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பூ, பழம், காய்கறி உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

கந்தர்வகோட்டை

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வீராச்சாமி, பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் தலைமையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 30 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப் பட்டதாக அச்சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் தெரிவித்தார்.

Next Story