குன்னூரில், சப்-கலெக்டர் திடீர் வாகன சோதனை


குன்னூரில், சப்-கலெக்டர் திடீர் வாகன சோதனை
x
தினத்தந்தி 26 April 2020 11:42 AM IST (Updated: 26 April 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், திடீரென வாகன சோதனை நடத்தினார்.

குன்னூர்,

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இறப்பு, மருத்துவ சிகிச்சை, திருமணம் போன்ற அவசர தேவைகளுக்கு வாகன அனுமதிகள்(இ பாஸ்) அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மட்டுமே வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக வாகன அனுமதி கோரி அவரவர் வீட்டில் இருந்தவாறே கணினி அல்லது செல்போன் வழியாக https://nilgiris.nic.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் நேரடியாக வந்து விண்ணப்பிப்பது மிகவும் சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்படும் என்பதால், மேற்கண்ட வசதி ஏற்படுத்தப்பட்டது. இ பாஸ் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பயணத்திற்கான காரணங்களை கூறி இ பாஸ் பெற்று நீலகிரியில் இருந்து வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு சென்று வருகிறவர்கள் தாங்களாகவே 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர, மற்ற காரணங்களுக்காக வாகனங்களில் செல்கிறவர்கள் இ பாசை காண்பித்த பிறகே சோதனைச்சாவடிகளில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி, பர்லியார் சோதனைச்சாவடிகளில் சிலர் போலியான அனுமதி சீட்டை(இ பாஸ்) கொண்டு நீலகிரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதாக குன்னூர் சப்-கலெக்டருக்கு புகார் வந்தது.

அதனை தொடர்ந்து நேற்று குன்னூர் லெவல் கிராசிங்கில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், தாசில்தார், குப்புராஜ் மற்றும் போலீசார் திடீரென வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற அவசர தேவைகளுக்காக செல்கிறவர்கள் இ பாஸ் பெற்று செல்கிறார்களா, அனுமதி சீட்டு உண்மையாக பெறப்பட்டதா என்று சோதனை செய்தனர். நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படும் அனுமதி சீட்டு செல்லுப்படியாகும் என்றும், அவ்வாறு இல்லாமல் போலியான அனுமதி சீட்டை பயன்படுத்தி செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story