தடை செய்யப்பட்ட நேரத்தில் திறந்திருந்த மளிகைக்கடைக்கு ‘சீல்’
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அத்தியாவசிய தேவைக்காக திங்கள் மற்றும் வியாழக்கிழமை என வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டும் மளிகைக்கடை, பெட்டிக்கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அத்தியாவசிய தேவைக்காக திங்கள் மற்றும் வியாழக்கிழமை என வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டும் மளிகைக்கடை, பெட்டிக்கடைகள் திறக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி ஆங்காங்கே திறக்கப்படும் கடைகளை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் அவ்வப்போது ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் நேற்று ஆய்வு செய்தபோது, செந்துறை ராமசாமி நகரில் முருகேசன் என்பவர், தடை செய்யப்பட்ட நேரத்தில் தனது மளிகைக்கடையை திறந்து வியாபாரம் செய்தார். அதனைத்தொடர்ந்து தாசில்தார் முத்துகிருஷ்ணன், அந்த மளிகைக்கடையை பூட்டி சீல் வைத்தார். இது செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி நடைபெறுகிறதா?, அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு குறை ஏதும் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறதா? பஸ் நிலையம், 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடைபெறுகிறதா? என ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடைவீதியில் உள்ள வெற்றிலை மற்றும் மளிகைக்கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு சென்று கடைக்காரரிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் வியாபாரம் செய்வதாக கூறி நகராட்சி ஆணையர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அனைத்து கடைக்காரர்களிடமும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story