பாகூர் ஏரியில், தடையை மீறி பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் - வனத்துறையினர் நடவடிக்கை
பாகூர் ஏரியில் தடையை மீறி பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் வலைகளை வனத்துறையினர் பறி முதல் செய்தனர்.
பாகூர்,
புதுவை கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை உள்ளது. எனவே பைபர் படகு மற்றும் நாட்டு படகில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்கள் மட்டும் கடலில் குறைந்த தொலைவுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே குளத்து மீன்கள், பண்ணை மீன்கள், இறால் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் வேல்ராம்பட்டு, கனகன் ஏரி உள்பட பல்வேறு நீர்நிலைகளில் மீன்கள் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலத்தின் பெரிய ஏரி களான ஊசுடு, பாகூர் ஏரிகளில் பறவைகள் அதிகளவில் வந்து செல்லும். எனவே அதனை பாதுகாப்பதற்காக மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி பாகூர் ஏரியில் சிலர் வலைகள் மற்றும் தூண்டில்கள் மூலம் மீன் பிடித்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை பாகூர் ஏரியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வலைகள் மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் தடையை மீறி மீன்கள் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்து, அவர் களை விடுவித்தனர்.
Related Tags :
Next Story