சமூக இடைவெளி கடை பிடிக்காததால் பல்பொருள் அங்காடியின் 8 கிளைகளுக்கு சீல் - கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை
சமூக இடைவெளி கடை பிடிக்காததால் பல்பொருள் அங்காடியின் 8 கிளைகளை சீல் வைத்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர் சி.கதிரவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பல்பொருள் அங்காடிக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தபோது அதில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் 3 பேர் பயணம் செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்யவும், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீஸ் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடி நிர்வாகம் சமூக விலகலை கடைபிடிக்காமல் செயல்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு சீல் வைக்கவும், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும் கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியின் கிளைகள் எந்தெந்த பகுதிகளில் உள்ளது என கேட்டறிந்தார். அப்போது அந்த பல்பொருள் அங்காடிக்கு சொந்தமாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு, பெருந்துறை, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 கிளைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில் ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் கிளைகளில் ஈரோடு தாசில்தார் பரிமளா ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தெரியவந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு சொந்தமான 8 கிளைகளுக்கு சீல் வைக்கவும், நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும் கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
அதன்படி பவானியில் தாசில்தார் பெரியசாமி, நகராட்சி பொறியாளர் கதிர்வேலு, சுகாதார துறை அதிகாரி சோலைராஜா ஆகியோரும், பெருந்துறையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும் சென்று பல்பொருள் அங்காடி கிளைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story