தடையை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
தமிழக அரசு அறித்துள்ள தடை உத்தரவை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிவகாசி,
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை அரசும், மாவட்ட நிர்வாகமும், ஆலை அதிபர்களும், அரசியல் கட்சியினரும் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் விருதுநகர் தாலுகா வி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலை 10 தொழிலாளர்களை கொண்டு இயங்கியது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு தகவல் வந்துள்ளது.
அதன் பேரில் சப்-கலெக்டர் தினேஷ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனிதாசில்தார் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பட்டாசு ஆலையில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு உற்பத்தி செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என தனிதாசில்தார் சீனிவாசன், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் ஆலை நிர்வாகத்தினர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story