கமுதி அருகே புதைத்து வைத்திருந்த 6 சிலைகள் மீட்பு கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேர் கைது


கமுதி அருகே புதைத்து வைத்திருந்த 6 சிலைகள் மீட்பு கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 27 April 2020 4:45 AM IST (Updated: 27 April 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே புதைத்து வைத்திருந்த 6 சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் ஒரு கும்பல் குழிதோண்டி சிலைகளை புதைத்து வைத்து இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைதொடர்ந்து உதவி சூப்பிரண்டு விவேக், துணை சூப்பிரண்டுகள் ராஜேஷ் (முதுகுளத்தூர்), மகேந்திரன் (கமுதி), சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தோப்படைபட்டி கிராமத்தில் ஒரு இடத்தில் புதைத்து வைத்திருந்த சிறிய அளவிலான 6 சிலைகள், நாணயங்கள், மாந்திரீக தகடுகள், மிளிரும் அலங்கார கற்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக முதுகுளத்தூரை சேர்ந்த செல்வக்குமார், தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, முருகராஜ், ஏனாதி கிராமத்தை சேர்ந்த பெண் முத்து, கீழகாஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலையாரி மகாதேவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-

தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகள் எந்த காலத்தில் தயார் செய்யப்பட்டவை, அதன் மதிப்பு என்ன என்பது தெரியவில்லை. தொல்லியல் துறை மூலமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. சிலர் தலைமறைவாகிவிட்டதால் இன்னும் பதுக்கப்பட்ட சிலைகள் எத்தனை? என்பது குறித்து துல்லியமாக தெரியவில்லை.

ஐம்பொன், செம்பு சிலைகளை மாந்திரீகம் செய்பவர்கள் பூமிக்கடியில் பதுக்கி வைத்து தங்கசிலை இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுக்கு வழியில் பணக்காரராக ஆகும் எண்ணத்தால் பலர், தாங்கள் உழைத்த பணத்தை இழந்து வருகின்றனர். ஆகவே மாந்திரீகம் என்ற பெயரை பயன்படுத்தி ஆசைவார்த்தை கூறுபவர்களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story