அனைத்து கடைகளும் அடைப்பு வீடுகளில் முடங்கிய மக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முழு ஊரடங்கு
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் வாங்குவதற்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தஞ்சை மாநகரில் 21 இடங்களில் காய்கறி கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஊரடங்கில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
முழு ஊரடங்கு
இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை மேலும் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் பச்சை, நீலம் மற்றும் ரோஸ் ஆகிய 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது கடந்த 14-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவர், வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வரும் வகையில் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டை வாரத்தில் 6 நாட்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது.
வெறிச்சோடி காணப்பட்டது
அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
ஸ்தம்பித்தது
இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மட்டும் இயங்கின.
பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல செயல்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மருந்துக்கடைகளும், வாகனங்கள் இயக்கப்படாததால் பெட்ரோல் பங்க்குளும் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வெளியே வராமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்கவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் கடைவீதிகள் உள்பட தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது. நீடாமங்கலம் அருகே உள்ள திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியிலும், நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்புகளை வைத்தும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மன்னார்குடியில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தன்னார்வலர்கள் போலீசாருக்கு உணவு வழங்கினர்.
முழு ஊரடங்கு காரணமாக மன்னார்குடி நகர சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
நாகை மாவட்டம்
நாகை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். வாகன போக்குவரத்து எதுவும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனையொட்டி பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
போலீசார் எச்சரிக்கை
திடீரென முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த காரணத்தால் நாகையில் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். ஓட்டல்கள் முழுமையாக மூடப்பட்டதால் நாகையில் தங்கி உள்ள வெளியூர்களை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர். முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த சிலரை போலீசார் எச்சரித்தனர்.
இதபோல் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில், வேதாரண்யம், குத்தாலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.
Related Tags :
Next Story