மராட்டிய அரசு கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரத்தை மறைக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு


மராட்டிய அரசு கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரத்தை மறைக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 April 2020 11:29 PM GMT (Updated: 26 April 2020 11:29 PM GMT)

மராட்டிய அரசு கொரோனா பாதிப்பு உண்மை நிலவரத்தை மறைக்கிறது என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை, 

மராட்டிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசை சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:-

தற்போது உள்ள ஆபத்தான நேரத்திலும் கூட ஆளும் கூட்டணி கட்சியினர் மற்றும் மாநில மந்திரிகள் இடையே ஒற்றுமையோ, ஒருங்கிணைப்போ இல்லை. இதற்காக மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

மாநில அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறது. ஆட்கொல்லி வைரசான கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சோதனை நடத்துவதை நிறுத்தி உள்ளது. மாநில அரசு கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரத்தை மறைக்கிறது.

உடல்கள் அடக்கம்

மாலேகாவ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 251 பேர் உடல் மட்டும் மாலேகாவில் அடக்கம் செய்யப்பட்து. ஆனால் நடப்பாண்டில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் அங்கு 485 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்தவர்கள் உடல் பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளபோதும், இதுபோன்ற செயல்களால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் உண்மைநிலையை மறைக்க முயற்சிக்கப்படுகிறது.

தாராவி மக்களுக்கு ஆபத்து

தாராவியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 2 ஆயிரம் பேர் தொடர்பில் இருந்து உள்ளனர். மாநில அரசு இந்த 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் அங்கு வசிக்கும் மக்களை ஆபத்தில் தள்ளி உள்ளது. ஊரடங்கின் போது தினக்கூலிகள், தொழிலாளர்களை கவனித்து கொள்வதில் அரசு தோல்வி அடைந்து உள்ளது. 3 கோடி பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்களை அரசு வழங்கவில்லை.

கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு, ஆதரவை அளிக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். எனவே நாங்கள் அரசுக்கு இதுபோன்ற வழியில் பரிந்துரைகள் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது மும்பை பெருநகர பகுதி, புனே தவிர மற்ற இடங்களில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story