சென்னையில் இருந்து குமரிக்கு இறந்தவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பரபரப்பு
சென்னையில் இருந்து குமரிக்கு, இறந்தவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆரல்வாய்மொழி,
சென்னையில் இருந்து குமரிக்கு, இறந்தவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
சோதனை சாவடி
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியான நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் இதுவரை 7 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மேலும் கடந்த 12 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் ஏற்படவில்லை. இது குமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது.
ஆம்புலன்ஸ் வாகனம்
தடுத்து நிறுத்தம்
அதே சமயத்தில், வெளியூரில் இருந்து நபர்களால் ஏதேனும் தொற்று ஏற்பட்டு மீண்டும் குமரியில் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் நபர்கள் அனுமதி சீட்டு வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் யாரேனும் வந்தால், கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் ஊரடங்கை மீறி வந்ததாக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இறந்தவரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மாரடைப்பால் சாவு
குமரி மாவட்டம் மேல்புறத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 67). இவருடைய மனைவி லைலா. இவர்களுடைய மகள் ஜெபகிறிஸ்ட் சென்னை திருவல்லிக்கேணியில் தன்னுடைய கணவர் ஏசாயனுடன் வசித்து வருகிறார். சில மாதத்திற்கு முன்பு சார்லஸ் சென்னையில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டுக்கு சென்றார். ஊரடங்கு காலத்திலும் அங்கேயே வீட்டுக்குள் முடங்கி இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனையடுத்து உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கை நடத்தலாம் என அவருடைய குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் வாகனத்தில் சார்லஸின் உடலை ஏற்றினர். அதில், சார்லஸின் மனைவி லைலா, மகள் ஜெபகிறிஸ்ட், மருமகன் ஏசாயன் ஆகியோர் இருந்தனர். ஆம்புலன்சை டிரைவர் ஓட்டினார். இந்த வாகனம் நேற்று மதியம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு வந்தது.
மனைவி வேதனை
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இறந்தவரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி சீட்டு இருக்கிறதா? என போலீசார் வாகனத்தில் இருந்தவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் இல்லையென்று கைவிரித்தனர். அனுமதி சீட்டு இல்லாமல் எப்படி வந்தீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என போலீசார் அவர்களிடம் துருவி, துருவி கேள்வி கேட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தும்படி கூறினர். இதனால், இறந்தவர் உடலுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கணவர் இறந்த சோகத்தில் இருந்த லைலா, கணவரின் இறுதி சடங்கை மேற்கொள்வதில் இப்படி ஒரு இடைஞ்சலா? என மன வேதனை அடைந் தார்.
மருத்துவ பரிசோதனை
பின்னர் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள், சென்னையை தொடர்பு கொண்டு சார்லஸ் எப்படி இறந்தார்? வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதில், மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், சார்லஸின் குடும்பத்தினர் 3 பேர், டிரைவர் ஆகிய 4 பேருக்கும் கொரோனா பரிசோதனைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை பரிசோதித்ததில், உடல் நிலை சீராக இருந்தது தெரியவந்தது. இவ்வாறு பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, இறந்தவரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் 3 மணி நேரம் அந்த பகுதி பரபரப்புடன் காட்சி அளித்தது.
Related Tags :
Next Story