நெல்லைக்கு ரெயில் மூலம் 1,300 டன் அரிசி வருகை
நெல்லைக்கு ரெயில் மூலம் 1,300 டன் அரிசி நேற்று கொண்டு வரப்பட்டது.
நெல்லை,
நெல்லைக்கு ரெயில் மூலம் 1,300 டன் அரிசி நேற்று கொண்டு வரப்பட்டது.
ஊரடங்கு
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, துவரம் பருப்பு, சீனி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் தொழிலாளர்கள் உள்பட அனைவராலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக தமிழகத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
1,300 டன் அரிசி
மத்திய தொகுப்பில் இருந்து வடமாநிலங்களில் இருந்து அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்துக்கு ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.
நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,300 டன் அரிசி மூட்டைகள் நெல்லைக்கு சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த மாநிலத்தில் இருந்து மேலும் 1,300 டன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
அந்த ரெயில் பெட்டிகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள சரக்கு இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிலிருந்து அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி, பெருமாள்புரம் குடோனுக்கு கொண்டு சென்று இறக்கி வைத்தனர். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப அரிசி அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story