அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு கவர்னர் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்துகிறார் அமித்ஷாவிடம், நாராயணசாமி புகார்


அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு கவர்னர் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்துகிறார் அமித்ஷாவிடம், நாராயணசாமி புகார்
x
தினத்தந்தி 27 April 2020 9:18 AM IST (Updated: 27 April 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்துகிறார் என உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். நேற்று காலை உள்துறை மந்திரி அமித்ஷா என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புதுவை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து அவரிடம் விளக்கினேன். மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டு கவர்னர் கிரண்பெடி குழப்பம் ஏற்படுத்துகிறார் என்று தெரிவித்தேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இது கோடை காலமாக இருப்பதால் தொழிலாளர்கள் வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே அவர்களை பாதுகாக்கும் விதமாக பணிகளை காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செய்யக் கூறி உள்ளோம்.

14 நாட்கள் தனிமை

மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படவுள்ளது. அதற்கான வட்டியை மாநில அரசு அளிக்கிறது. இந்த கடன் தொகையை தலா ரூ.5 ஆயிரம் வீதம் 2 மாதங்களில் வழங்க கூறியுள்ளோம். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. அனுமதிபெற்று வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் அத்தகையவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படுவார்கள்.

மத்திய அரசு தற்போது நகரம், கிராம பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், பாத்திரக் கடைகள், இரும்பு, ஜவுளி கடைகள் திறக்கப்பட வேண்டும். இந்த கடைகள் அரசின் வழிகாட்டுதலின்படி 50 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்க வேண்டும். கடையில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். கடைக்கு வருபவர்களும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்து பொருட்களை வாங்க வேண்டும். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

சவால்

ஊரடங்கு வெகுநாட்களாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விரும்புகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் இந்த விருப்பங்களை தெரிவித்துள்ளனர். இதற்கு விமானம், பஸ், ரெயில் இயக்கப்பட வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்படாதவர்கள் அதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இது தற்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story