முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 April 2020 10:48 AM IST (Updated: 27 April 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

விலையில்லா பொருட்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தனது சொந்த நிதி ரூ.6 கோடியில் பொதுமக்களுக்கு விலையில்லாமல், 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு, ½ லிட்டர் சமையல் எண்ணெய், சர்க்கரை, உப்பு, மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று நேரில் வழங்கினார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய பைகள் கொண்டு செல்லும் 25 வாகனங்களை தாந்தோணிமலையில் தொடங்கி வைத்தார்.

வீடு, வீடாக சென்று...

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பேரில், கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்துகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வழங்கி வருகிறோம். மேலும் எம்.ஆர்.வி. டிரஸ்ட் மூலம் தினமும் காலை முதல் மாலை வரை பல்வேறு பணியாளர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.

முன்னதாக தாந்தோணிமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய பைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story