ஊரடங்கால் பயன்பாடு அதிகரிப்பு: இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு
ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பலர் தொலைக்காட்சி பார்ப்பதிலும், ஸ்மார்ட் போன்களில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதிலும், சிலர் வீட்டிலேயே கணினியில் அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் நேரத்தை கழிக்கின்றனர். இதனால் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது, கேரம் விளையாடுவது, திரைப்படங்கள் பார்ப்பது, சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு மாத காலக்கட்டத்தில் பல மடங்கு கூடியுள்ளது.
முன்னணி செல்போன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜி.பி., 1.5 ஜி.பி., 2 ஜி.பி. என இணைய சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. செல்போன்களில் இருந்து கணினிக்கும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையம் பயன்பாடு அதிகரிப்பால் அதன் வேகம் முன்பு போல் இல்லாமல் இந்த ஊரடங்கு காலத்தில் குறைவாகவே உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையம் பயன்படுத்துவதால் அதன் வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. சற்று விட்டு, விட்டு சிக்னல் கிடைக்கிறது. இதனால் ஸ்மார்ட் போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வது, இ-மெயில்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக பயனாளர்கள் குறை கூறுகின்றனர். பணிநிமித்தமாக அலுவலகம் செல்லும் போது, வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே செல்போன் பயன்படுத்தினர். ஆனால் தற்போது அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாலும், அதில் பலர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பதாலும் இணையத்தின் வேகம் வெகுவாக குறைகிறது. இதனை சீராக்க செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story