கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமா? என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.
கோவில்பட்டி,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரில் 25 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி மட்டும் உயிரிழந்து உள்ளார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் தொடர்ந்து சுய ஊரடங்கை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்க முடியும்.
ஆன்லைன் மூலம்...
கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் நேரத்தில், திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாராக இருந்தாலும், ஆன்லைன் மூலம் படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல. ஊரடங்கு முடிந்த பின்னர் இருதரப்பினரும் அரசை அணுகினால், பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படுத்தலாம். எனவே, ஊரடங்கு முடியும் வரையிலும் பொறுத்து இருக்கலாம்.
கொரோனா வைரசின் தாக்கத்தை ஆராய்ந்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசாரை போன்று பத்திரிகையாளர்களும், ஊடகத்துறையினரும் பணியாற்றி வருகின்றனர். எனவே, மற்றவர்களுக்கு அரசு ரூ.1,000 நிவாரண உதவி வழங்கியபோது, பத்திரிகையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரண உதவி வழங்கியது. பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்வார்.
சம்பளத்தில் பிடித்தம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா? என்பது தொடர்பாக மாநிலத்தின் நிதி நிலைமையை பொறுத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story