காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு: வதந்தியை நம்பி நிவாரண பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
வதந்தியை நம்பி காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக ஒரு தகவல் பரவியது. இதையடுத்து காரைக்குடி இடைத்தெரு, அண்ணாநகர், முத்துராமலிங்க நகர், ஆனந்தாநகர், டி.டி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தங்களது ரேஷன் கார்டு மற்றும் பைகளுடன் திரண்டனர்.
இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் நுழைவுவாசல் கேட்டை பூட்டி, வெளியே காத்திருக்கும் வகையில் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின்பேரில் அங்கு வந்த காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார், அங்கு திரண்டு நின்றவர்களிடம் கேட்ட போது, தாலுகா அலுவலகத்தில் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்குவதாக கூறியதால், அதை பெற இங்கு வந்து காத்திருக்கிறோம் என்றனர்.
போலீசார், அதுபற்றி காரைக்குடி தாசில்தார் பாலாஜிடம் கேட்டபோது, இது தவறான தகவல் என்றும், யாரோ சிலர் மக்களிடம் வதந்தியை பரப்பி உள்ளனர் என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த பொதுமக்களிடம் வதந்தி குறித்து விளக்கம் அளித்தனர். நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டால், அதை உங்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் அங்கு திரண்டு இருந்தவர்களையும் கலைந்து போக செய்தனர். இதில் சில மாற்றுத்திறனாளிகளும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் கூறும் போது, “நிவாரண பொருட்கள் வழங்குவதாக தவறான தகவல் மற்றும் வதந்தியை பரப்புபவர்கள் குறித்து தெரிவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story