தென்காசியில் ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்: கொரோனாவை கட்டுப்படுத்த செய்ய வேண்டியது என்ன? - சித்தா டாக்டர்கள் ஆலோசனை
தென்காசியில் ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி சித்தா டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.
தென்காசி,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஒருங்கிணைந்த தமிழக அரசின் நோய்த்தடுப்பு திட்டமான ‘ஆரோக்கியம்’ அறிமுக நிகழ்ச்சி தென்காசி இசக்கி மஹாலில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி சித்தா டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
கொரோனா பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த நாம் முதலில் செய்ய வேண்டியது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க போராட வேண்டும். சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்றவற்றை டாக்டர்கள் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக இனிப்பை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இனிப்பான பொருட்களை கொடுக்கக்கூடாது. கார்ப்பு சுவை அதிகமான பொருட்களை சாப்பிடலாம்.
வெந்நீர் குடிக்க வேண்டும்
தினமும் யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். வெந்நீரை குடிக்க வேண்டும். வெந்நீரில் அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை மற்றும் மூக்கின் வழியாக ஆவி பிடிக்க வேண்டும். தங்களது இருப்பிடத்திலேயே தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலை 11 மணிக்கு முன் மற்றும் மாலை 4 மணிக்கு பிறகு சூரிய குளியல் மேற்கொள்ள வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீரை தினமும் குடிக்கலாம். நோயின் எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையிலும் இந்த குடிநீரை குடிப்பது நல்லது.
பருக வேண்டிய அளவு
கபசுர பொடியை 5 கிராம் எடுத்து 200 மி.லி தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து 50 மி.லி.ராக வற்ற வைத்து வடிகட்டி இளஞ்சூட்டில் காலை, மாலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனை தயார் செய்த 3 மணி நேரத்திற்குள் பருகவேண்டும். வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப அளவை கணக்கிட்டு கொள்ளலாம். காய்ச்சல் வராமல் காத்துக்கொள்ள 2 முறை பருகவேண்டும். காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை பருக வேண்டும். 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ளவர்கள் 2.5 மி.லி அளவும், 1 வயது முதல் மூன்று வயது வரை உள்ளவர்கள் 5 மி.லி அளவும், 3 வயது முதல் 6 வயது வரை உள்ளவர்கள் 7.5 மிலி அளவும், ஆறு வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி அளவும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 முதல் 60 மி.லி அளவும் குடிக்க வேண்டும். காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு விட சிரமம் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு உடனே செல்ல வேண்டும்.
இவ்வாறு சித்தா டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, கடையநல்லூர் அரசு டாக்டர் ராஜேஸ்வரி, செங்கோட்டை ஆயுர்வேத மருந்தக டாக்டர் ஹரிஹரன், தென்காசி அரசு டாக்டர்கள் கிறிஸ்டி, மேனகா, செங்கோட்டை அரசு டாக்டர் கலா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story