பர்கூர் அருகே லாரி டிரைவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
பர்கூர் அருகே லாரி டிரைவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
பர்கூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் பயணம் செய்த மற்றொருவரான தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளியைச் சேர்ந்த டிரைவரை அதிகாரிகள் தேடி வந்தனர். அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இந்த லாரி டிரைவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஜெகதேவி வட்டாரம் காரகுப்பம் அருகே உள்ள கோதிஅழகனூர் கிராமத்தில் இருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த டிரைவர் கோதி அழகனூரில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை 15 நாட்களுக்கு முன்பு வந்து பார்த்து சென்றதும், அதன் பிறகு அவர் வராததும் தெரியவந்தது.
இந்த நிலையில் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அந்த லாரி டிரைவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்த போதிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். அதேபோல லாரி டிரைவரும் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
Related Tags :
Next Story