3-வது நாளாக முழு ஊரடங்கு: சேலம் மாநகர் வெறிச்சோடியது; வெளிநபர்களுக்கு தடை


3-வது நாளாக முழு ஊரடங்கு: சேலம் மாநகர் வெறிச்சோடியது; வெளிநபர்களுக்கு தடை
x
தினத்தந்தி 27 April 2020 11:30 PM GMT (Updated: 27 April 2020 9:12 PM GMT)

முழு ஊரடங்கையொட்டி 3-வது நாளான நேற்று சேலம் மாநகர் வெறிச்சோடியது. உரிய ஆவணங்கள் இன்றி வந்த வெளி நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்கவும் கடந்த 25-ந்தேதி, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதனிடையே சேலம் மாநகராட்சியில் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி நேற்று சேலத்தில் 3-வது நாளாக முழு ஊரடங்கு நீடித்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் எதுவும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து இடங்களிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.


 சேலம் பெரியார் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.



கிச்சிபாளையம், களரம்பட்டி, அம்மாபேட்டை, ஜாகீர்அம்மாபாளையம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, முகமது புறா தெரு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் செல்லாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் முழு ஊரடங்கிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.

சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாநகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். அப்போது அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வெளியில் வலம் வந்த வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் வெளியூர்களில் இருந்து வந்த நபர்கள், சீலநாயக்கன்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தினார்கள். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.



 சேலம் சீலநாயக்கன்பட்டியில் வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.



முழு ஊரடங்கு உத்தரவால் 3-வது நாளாக நேற்று சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகள் எதுவும் செயல்படவில்லை. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பால் மற்றும் காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 80 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு சாப்பிட்டனர். அதேபோல் இதர பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களிலும் பொதுமக்கள் சாப்பிட்டு சென்றனர்.

முழு ஊரடங்கு சேலம் மாநகரில் நீடித்த போதிலும், மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நேற்று கடைகள் திறக்கப்படவில்லை. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதன் காரணமாக தலைவாசல், மேட்டூர், ஏற்காடு, மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி என புறநகர் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அந்த பகுதிகளிலும் முழு ஊரடங்கு போன்ற நிலையே இருந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story