ஊரடங்கிற்கு மத்தியில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் லாரியில் சென்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


ஊரடங்கிற்கு மத்தியில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் லாரியில் சென்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 April 2020 3:22 AM IST (Updated: 28 April 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே ஊரடங்கிற்கு மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் லாரியில் சென்றவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மந்தாரக்குப்பம்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் லாரியின் பின்னால் ஏராளமானவர்கள் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், ஊரடங்கு நேரத்தில் இப்படி பயணம் செய்து எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தனர். அதில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்ய வந்து இருப்பது தெரியவந்தது. மேலும் நிச்சயம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு மினிலாரியில் திரும்பி சென்றதும் தெரியவந்தது.

லாரி பறிமுதல்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது இதுபோன்று பயணம் செய்வது தவறானது என்று கூறி அவர்களை போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்தனர். மேலும் லாரி டிரைவரும், உரிமையாளருமான சிவங்கர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், கங்கைகொண்டான் பேரூராட்சி எழுத்தர் பாரூக் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story