2 பேருக்கு கொரோனா தொற்று: கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை


2 பேருக்கு கொரோனா தொற்று: கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை
x

கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை, 

கோயம்பேடு மார்க்கெட்டை மாதவரம், கேளம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்வது குறித்து நேற்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும், மார்க்கெட்டை புறநகரில் அமைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகள் எதிர்ப்பு

இது மேலும் பரவும் அபாயம் உள்ளதால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டை மாதவரம், கேளம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யலாமா? என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். அதிகாரிகளின் யோசனைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘ஏற்கனவே நாங்கள் கடை வாடகை, இட வாடகை கொடுத்து வியாபாரம் நடத்தி வருகிறோம். ஊரடங்கால் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதனால் ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். காய்கறிகளும், பழங்களும் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இந்த சமயத்தில் மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மீண்டும் ஆலோசனை

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அரசு அறிவித்த முழு ஊரடங்கு உத்தரவால் கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஏற்கனவே தள்ளுவண்டி, நடமாடும் காய்கறிகடைகள் மூலமாக விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் ஏதாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடமாற்றம் செய்ய வேண்டாம்’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்தநிலையில், இதுகுறித்து வியாபாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு சங்க பிரதிநிதிகளை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மீண்டும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story