‘டிக்-டாக்’ மூலம் ஒருதலைக்காதல்: தஞ்சையில் இருந்து நடந்து மதுரை வாலிபரை காண வந்த பெண்
‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி,
தஞ்சை பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். இவர் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமானார். அந்த பெண் ஒருதலையாக அந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் டிக்-டாக் பழக்கத்தை கைவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த பெண், தனது காதலில் தீவிரமாக இருந்தார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த வாரம் அந்த பெண், மதுரை வாலிபரை பார்ப்பதற்காக தஞ்சையில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக கூறி, டிக்-டாக் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தனியாக மதுரையை நோக்கி நடந்துவருவதாகவும், சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும், காதல் பாடல்களை பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறேன் என்பதையும் வீடியோ பதிவாக செல்போனில் படம் பிடித்து அவ்வப்போது அதனையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் நேற்று மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வந்துவிட்டதாகவும், அந்த வாலிபரின் பெயரை குறிப்பிட்டு தன்னை மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்து செல்லும்படி கூறி ஒரு வீடியோவை டிக்-டாக் மூலம் பதிவு செய்தார். இவரது வீடியோவை வலைத்தளங்களில் பார்க்கும் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியும், இன்னும் சிலர் அவரை வசை பாடியும், இன்னும் சிலர் போலீசார் இதை கவனிக்க வேண்டும் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story