நீடாமங்கலத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது பரிதாபம்
நீடாமங்கலத்தில், தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டன.
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில், தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டன.
தந்தையுடன் பேசினார்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் சந்து பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி(வயது 18). இவர் நேற்று காலை செல்போனில் வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் ‘வீடியோ கால்’ மூலமாக பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. செல்போனின் உடைந்த பாகங்களின் துகள்கள், ஆர்த்தியின் கண்களுக்குள் புகுந்தன. துகள்கள் காதுகளுக்குள்ளும் சென்றது. இதனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்கள் பாதிப்பு
இரு கண்களுக்குள்ளும் துகள்கள் புகுந்து பாதிக்கப்பட்ட நிலையில் ஆர்த்தி வலியால் அலறி துடித்தார். அவரை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் டாக்டரின் பரிந்துரையின் பேரில் ஆர்த்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்போனை சார்ஜரில் போட்டு பேசிக்கொண்டிருந்ததால் செல்போன் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செல்போன் வெடித்த சத்தம் கார் டயர் வெடித்தது போல் இருந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story