தோட்டக்கலை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் - முன்னாள் பிரதமர் தேவேகவுடா வலியுறுத்தல்


தோட்டக்கலை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் - முன்னாள் பிரதமர் தேவேகவுடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2020 5:12 AM IST (Updated: 28 April 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நீங்கள், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளர்கள். நீங்கள் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியிலும் ஆதரவு அளிக்கிறேன். கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.

இந்த காலக்கட்டத்தில் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்பது உங்களுக்கும் தெரியும். அதேபோல் விவசாயிகளும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக பழங்கள், தக்காளி, பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தையும் இல்லை, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளும் இல்லை. பழைய மைசூரு, ஐதராபாத்-கர்நாடக, மும்பை-கர்நாடக பகுதிகளில் தக்காளி, பழங்கள், பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள், அதை விற்க முடியாமல் கடன்காரர்களாக மாறிவிட்டனர்.

லட்சக்கணக்கான ஏக்கரில் அன்னாசி, தர்ப்பூசணி, மாதுளை, வாழை, திராட்சை, பப்பாளி, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை அறுவடை செய்யாமல் அப்படியே விவசாயிகள் உழுதுவிட்டனர். சில பகுதிகளில் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். அவற்றுக்கு செய்த செலவு கூட கிடைக்கவில்லை.

அதேபோல் தக்காளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோசு, குடை மிளகாய், கேரட், பீன்ஸ், கீரை, வெங்காயம் போன்றவற்றை விவசாயிகள் விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை விளைவித்தவர்கள், மார்க்கெட்டே கிடைக்காமல், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தரமான பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கர்நாடகத்தின் பெருமையை நிலைநாட்டிய விவசாயிகள் இன்று தெருவுக்கு வந்துவிட்டனர். அதனால் இந்த தோட்டக்கலை பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தி அந்த விவாயிகளுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை நீங்கள் அறிவிக்க வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்களை கைவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் விவசாயிகளை கைவிட வேண்டாம். தேவைக்குபோக உபரியாக இருந்த பாலை அரசே கொள்முதல் செய்து, ஏழை மக்களுக்கு வினியோகம் செய்கிறது. இதற்காக உங்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அதேபோல் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் நீங்கள் உதவ வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்கள் தங்களின் நிலத்தை விற்று கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மாம்பழங்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Next Story