ஊட்டி தேயிலை பூங்காவில் ஊரடங்கிலும் ‘கிரீன் டீ’ உற்பத்தி மும்முரம் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் தேக்கம்


ஊட்டி தேயிலை பூங்காவில் ஊரடங்கிலும் ‘கிரீன் டீ’ உற்பத்தி மும்முரம் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் தேக்கம்
x
தினத்தந்தி 28 April 2020 5:20 AM IST (Updated: 28 April 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தேயிலை பூங்காவில் ஊரடங்கிலும் ‘கிரீன் டீ’ உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் தேக்கம் அடைந்து இருக்கிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் தோட்டக்கலைத்துறையின் தேயிலை பூங்கா உள்ளது. 10½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 6 ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பூங்கா மூடப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. கோடை சீசனுக்காக 30 ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 40 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

சீசனை வரவேற்கும் வகையில் மலர் செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மொட்டுகள் விரிந்து, கண்டு ரசிக்க ஆள் இல்லாமல் கீழே உதிர்ந்து விழுந்து வருகின்றன. மலர்களால் சுற்றுலா பயணிகளை கவர முடியாமல் போனது. வழக்கமாக கோடை சீசனில் கூட்டம் காணப்படும். தற்போது பூங்காவில் பறவைகளின் சத்தம் மட்டும் கேட்டு, நிசப்தம் நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், பூங்காவில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு ‘கிரீன் டீ’ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமும் 30 கிலோ பச்சை தேயிலை

தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தினமும் 30 கிலோ பச்சை தேயிலை பறிக்கப்படுகிறது. பின்னர் கைவினை தேயிலை தொழிற்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ள சூடேற்றும் எந்திரத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடேற்றப்பட்ட பிறகு வெளியே உலர வைக்கப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சூடேற்றும் எந்திரத்தில் 3 மணி நேரம் வைப்பதால், தேயிலை இலைகள் தேயிலைத்தூளாக(‘கிரீன் டீ’) மாறி விடும். 6 கிலோ பச்சை தேயிலை மூலம் ஒரு கிலோ ‘கிரீன் டீ’ உற்பத்தி செய்யப்படுகிறது.

தேக்கம்

ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட முதல் 10 நாட்கள் பச்சை தேயிலை பறிக்கவில்லை. அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தேயிலை தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்ததை அடுத்து, ‘கிரீன் டீ’ உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ‘கிரீன் டீ’ உற்பத்தி மும்முரமக நடந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 50 கிலோ ‘கிரீன் டீ’ பேக்கிங் செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய முடியாததாலும், விற்பனைக்கு வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் தேக்கம் அடைந்து இருக்கிறது.


Next Story