ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ராமேசுவரத்தில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்


ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ராமேசுவரத்தில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 April 2020 10:30 PM GMT (Updated: 27 April 2020 11:56 PM GMT)

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ராமேசுவரம் பகுதியில் சைக்கிள் ஓட்டுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பழைய சைக்கிள்கள் திடீரென அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

ராமேசுவரம், 

கொரோனா பரவலை தடுக்க பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுபோல் புண்ணிய தலமான ராமேசுவரம் பகுதியிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்களை தவிர இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றும் இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்தநிலையில் ராமேசுவரம் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து சைக்கிள்களில் வெளியே செல்ல தொடங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் எந்த வாகனங்களும் செல்லாத நிலையில் ராமேசுவரம் புதுரோடு, நடராஜபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சைக்கிளில் சென்று அங்கு சைக்கிளை நிறுத்தி விட்டு, நாட்டுப்படகு மூலம் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடிப்பதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சைக்கிள்களை ஓட்டி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளின் தேவைகள் அதிகரித்துவிட்டது. பலர் பழைய சைக்கிள்களை விலைக்கு வாங்கி ஓட்டி வருகின்றனர்.

இதுபற்றி நடராஜபுரம் மீனவர் சங்கர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தினமும் காலை 4 மணிக்கு இருசக்கர வாகனம் அல்லது மீன் ஏற்ற வரும் வாகனத்தில் தனுஷ்கோடிக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவேன். ஆனால் தற்போது போலீசார் இருசக்கர வாகனங்களை மடக்குவதால், ஒரு பழைய சைக்கிளை ரூ.2 ஆயிரம் கொடுத்து வாங்கி, அதில் தனுஷ்கோடிக்கு சென்று வருகிறேன்.

சென்று வர தினமும் 30 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுவதால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்றார். இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் பலரும் போலீசாரிடமிருந்து தப்பவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் சைக்கிளில் சென்று வருகின்றனர். இதனால் நகர் பகுதியில் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

Next Story