திருவொற்றியூரில் கஞ்சா தகராறில் வாலிபர் அடித்துக்கொலை - கடற்கரையில் உடல் புதைப்பு


திருவொற்றியூரில் கஞ்சா தகராறில் வாலிபர் அடித்துக்கொலை - கடற்கரையில் உடல் புதைப்பு
x
தினத்தந்தி 28 April 2020 5:52 AM IST (Updated: 28 April 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கஞ்சா தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்து கடற்கரையில் அவரது உடலை புதைத்தனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் ராஜா கடை ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் ஜெயராம் (வயது 18). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றவர், அதன்பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இதையடுத்து தனது மகன் மாயமானதாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் மனு கொடுத்தார். அதனுடன் மாயமான ஜெயராமின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக ஒரு கால் ரெக்கார்டு ஆடியோவையும் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாயமான ஜெயராமை தேடினர்.

இதற்கிடையில் ரேவதி கொடுத்த கால் ரெக்கார்டு ஆடியோவை போலீசார் போட்டு கேட்டனர். அதில் பயங்கர இரைச்சல் சத்தத்துக்கு நடுவில் சிலர் கல்லை எடு, குழி தோண்டு என பேசும் சத்தம் கேட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 25-ந்தேதி ஜெயராமுக்கு அவருடைய நண்பரான விக்கி என்பவர் முதலில் போன் செய்தார். போனை எடுத்த ஜெயராம், வண்டி ஓட்டுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 2-வது முறையாக போன் செய்தபோது இரைச்சல் சத்தம் அதிகமாக இருந்ததால் அதனை போனில் ரெக்கார்டு செய்துள்ளார். 9.45 முதல் 9.49 வரை விக்கியின் போனில் கால் ரெக்கார்டு ஆகி உள்ளது.

அதன்பிறகு 9.50 மணிக்கு போன் செய்தபோது ஜெயராமின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பயந்து போன விக்கி, தன்னுடைய செல்போனில் இருந்த கால் ரெக்கார்டு ஆடியோவை ஜெயராமின் மற்றொரு நண்பரான மதனுக்கு அனுப்பி உள்ளார். அவர், அந்த ஆடியோவை ஜெயராமின் தாயாரிடம் கொடுத்த பிறகே அவர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என தெரியவந்தது. இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து ஜெயராம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதற்கிடையில் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (19) என்பவரிடம் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தனர். அதில் ஜெயராம் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.

கஞ்சா போதைக்கு அடிமையான ஜெயராம், திருவொற்றியூர் சுங்கச்சாவடி எதிரே உள்ள என்.டி.ஓ.குப்பம் கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்து 25-ந்தேதி இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார்.

அங்கிருந்த சிலர் தங்களிடம் கஞ்சா இல்லை. பணம் கொடுத்தால் வாங்கி வந்து தருவதாக கூறினர். அதன்படி ஜெயராம் ரூ.600 கொடுத்தார். பணத்தை வாங்கி சென்றவர்கள், சிறிது நேரத்தில் திரும்பி வந்து, கஞ்சா கிடைக்கவில்லை. போலீஸ் விரட்டுகிறார்கள் என்றனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராம் அங்கிருந்த ஒருவரை தாக்கினார். இதனால் அங்கிருந்த மற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த பாட்டிலை எடுத்து ஜெயராமை தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ஜெயராம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பயந்துபோன அவர்கள், கொலையை மறைக்க கடற்கரையில் குழி தோண்டி ஜெயராமின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது.

நாகராஜ் கொடுத்த தகவலின்பேரில் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதி கடற்கரையில் பதுங்கி இருந்த மவுத்தையா(19), சூர்யா (20), கணேஷ் (21), ஜோசப் (19), அலிபாய் (21) ஆகிய மேலும் 5 பேரை புகார் பெறப்பட்ட 7 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, தாசில்தார் கணேசன், தடய அறிவியல் துறை அதிகாரி நிர்மலா ஆகியோர் மேற்பார்வையில் கைதான 6 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஜெயராம் உடலை புதைத்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அதன்பின்பு ஜெயராமின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைதான 6 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அடுத்த விசாரணை தொடங்கும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story