குமரியில் கொரோனா ஊரடங்கு: வெறிச்சோடிய விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு
கொரோனா ஊரடங்கால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை வெறிச்சோடியது. படகு போக்குவரத்து ரத்தால் தினமும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி,
கொரோனா ஊரடங்கால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை வெறிச்சோடியது. படகு போக்குவரத்து ரத்தால் தினமும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம்
கொரோனா முடக்கியது பொதுமக்களை மட்டுமில்லை, சுற்றுலா தலங்களையும் தான். இந்தியாவின் பெருமையை பறை சாற்றும், அன்னிய செலாவணியை ஈட்டி தரும் இந்த சுற்றுலா தலங்கள் தற்போது பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. அந்த வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கன்னியாகுமரியில் மக்களை கவரும் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மிகவும் புகழ்பெற்றது. அதன் வரலாறும், உருவாக்கப்பட்ட விதமும் பொக்கிஷமானது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் ரசிப்பார்கள். தற்போது அந்த இடம், எந்தவொரு பரபரப்பும் இன்றி கடல் அலை ஓசை மட்டும் கேட்கிறது. படகு போக்குவரத்து முடக்கப்பட்டதால், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்புக்கு இடையே கன்னியாகுமரியின் பெருமையையும் இந்த நேரத்தில் திரும்பி பார்க்கலாம்.
உதயமான வரலாறு
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன், சிவபெருமானை வேண்டி ஒற்றை காலில் நின்று தவம் செய்ததாகவும், அதனால் அந்த பாறையில் பகவதி அம்மனின் கால்பாதம் பதிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அம்மனின் கால் பாதத்தை பார்த்து தியானம் செய்வதற்காக சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கன்னியாகுமரி வந்ததாகவும் அன்று முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் அந்த பாறையில் அமர்ந்து அவர் தவம் செய்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
அதன் நினைவாக அந்த பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. அதன்படி 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டபம் எழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த மண்டபத்தை விவேகானந்த கேந்திரா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
திருவள்ளுவர் சிலை
இந்த விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நிர்வகித்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்படுகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளிடம் படகு பயண கட்டணமாக ஒருவருக்கு ரூ.50-ம், வரிசையில் நிற்காமல் நேரடியாக படகில் ஏறி செல்வதற்கு சிறப்பு கட்டணமாக ஒருவருக்கு ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
படகு போக்குவரத்து ரத்து
இது தவிர விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்கு நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.20-ம் விவேகானந்த கேந்திரா நிர்வாகம் வசூலித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மதியத்துக்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு நேற்றுடன் 41 நாட்கள் ஆகிறது. அந்த படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வருவாய் இழப்பு
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்த கேந்திரா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு தினமும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சபரிமலை மற்றும் கோடை விடுமுறை சமயத்தில் வழக்கத்தை விட கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கோடை விடுமுறை சீசன் தொடங்குவதற்கு முன்பே மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் படகு போக்குவரத்தை ரத்து செய்து விட்டோம்.
குறைந்தது 6 மாதம்...
படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. சீசன் நேரங்களில் தினமும் சராசரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். சீசன் அல்லாத நேரங்களில் தினமும் சராசரியாக 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கோடைவிடுமுறை சீசன் தொடங்குவதற்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. ஊரடங்கு முடிந்த பிறகும் பழைய நிலைக்கு வருவதற்கே குறைந்தது 6 மாதம் ஆகலாம். அதன் பிறகு தான் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story