போக்குவரத்து நிறுத்தம்: சைக்கிள் ரிக்ஷாவில் பயணிக்க தொடங்கிய மக்கள்
கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக மக்கள் சைக்கிள் ரிக்ஷாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.
திருச்சி,
கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக மக்கள் சைக்கிள் ரிக்ஷாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.
உலகமே ஆட்டம்
மாட்டு வண்டியிலும், நடந்தும், சைக்கிளிலும், சைக்கிள் ரிக்ஷாக்களிலும், குதிரை வண்டிகளிலும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வந்த காலம்போய் மோட்டார் சைக்கிள், கார் என தற்போது மாற்றம் வந்து விட்டது. மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டோம்.
ஆனால், இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையால் உலக நாடுகளே ஆடிப்போய் உள்ளது. உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் மட்டுமே நடந்து வருகிறது. பஸ், கார் மற்றும் ஆட்டோ சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு விட்டதால் வெளியூர் பயணங்களும் இல்லை. அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு செல்வதென்றால் கூட ஆட்டோ வராது. ஏனென்றால், ஆட்டோ ஓடினால் பறிமுதல். ஒரு நபருக்கு மேல் மோட்டார் சைக்கிளில் சென்றால் அவை பறிமுதல் என கட்டுப்பாடுகள் உள்ளன.
சைக்கிள் ரிக்ஷா
எத்தனை நாட்கள்தான் வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பது. அருகில் உள்ள ஊரில் உறவினர்களையும், கட்டி கொடுத்த மகளையும் நேரில் சந்தித்து பேசமுடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, ஊரடங்கால் மக்களும் பழைய நிலைக்கு சென்று விட்டனர்.
ஆம்.. திருச்சியில் சைக்கிள் ரிக்ஷாவில் மக்கள் பயணம் செய்ய தொடங்கி விட்டனர். வருமானம் இன்றி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷா, பயணிகளின் சவாரி வாகனமாக வலம் வரத்தொடங்கி விட்டது.
இதுவரை சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள பள்ளிக்கு மழலைகளை அழைத்து சென்று மீண்டும் வருவேன் என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வருமானம் இல்லை என்றும், தற்போது சைக்கிள் ரிக்ஷா சவாரியை பொதுமக்கள் விரும்பு வதாகவும் ரிக்ஷா தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story