தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் 2008-ம் ஆண்டில், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அவ்வாறு உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு 772 பேர் அடையாள அட்டைகள் பெற்று உள்ளனர். அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலும், ஓய்வு பெற்றிருந்தாலும், முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.
சுகாதார பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் பதிவேட்டில் அவர்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கி கிளை, ஐ.எப்.எஸ்.சி. எண் போன்ற விவரங்கள் இல்லாததால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, வங்கி கணக்கு எண்கள் பெறப்பட்டு, அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் நிவாரணத்தொகை ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 474 பேரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 298 பேரும் தற்போது பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்று இருந்தாலும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கி கிளை மற்றும் ஐ.எப்.எஸ்.சி. எண் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவோ அல்லது dmthahdcotkd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 94450 29532 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ தெரிவித்து நிவாரணத்தொகையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story