சீசனில் பழம் பறிக்க முடியாததால் விவசாயிகளுக்கு நஷ்டம்: ஊரடங்கால் நசுங்கிய எலுமிச்சை சாகுபடி


சீசனில் பழம் பறிக்க முடியாததால் விவசாயிகளுக்கு நஷ்டம்: ஊரடங்கால் நசுங்கிய எலுமிச்சை சாகுபடி
x
தினத்தந்தி 29 April 2020 4:15 AM IST (Updated: 29 April 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக, புளியங்குடியில் சீசனில் எலுமிச்சை பழம் பறிக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

புளியங்குடி,

‘இந்தியாவின் எலுமிச்சை நகரம்‘ என்று சிறப்புபெற்ற புளியங்குடி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அனைத்து கோவில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பெறுவது எலுமிச்சை பழம். இது மருத்துவ குணம் வாய்ந்ததும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஊட்டச்சத்து மிக்க பழமாகும். எலுமிச்சையில் இருந்து ஊறுகாய், நறுமண பொருட்கள், எண்ணெய், சோப்பு போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.

புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள வளமிக்க மண்ணில் விளைவிக்கப்படும் எலுமிச்சை பழங்களில் இயற்கையாகவே சிட்ரிக் அமிலம் அதிகமாகவும், நீர்ச்சத்து குறைவதற்கு நீண்ட நாட்களும் ஆகிறது. இதனால் எலுமிச்சை பழம் அளவில் பெரியதாகவும், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமலும் உள்ளது.

எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு, 5 ஆண்டுகளில் இருந்து பழங்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும், சொட்டுநீர் பாசனம் மூலமும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தான் எலுமிச்சை பழம் சீசன் அமோகமாக இருக்கும்.

அறுவடை செய்யப்படும் எலுமிச்சை பழங்களை புளியங்குடி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். அவற்றை ஏலம் மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள், தொழிற்சாலைகளுக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய அளவு வருமானம் கிடைத்து வந்தது.

மார்க்கெட்டுகள் மூடல்

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த எலுமிச்சை பழங்களை புளியங்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், செவன்த் டே மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகியவற்றில் தற்காலிகமாக எலுமிச்சை மார்க்கெட் செயல்பட்டது.

இதற்கிடையே, புளியங்குடி பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், தற்காலிக மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. இதனால் அறுவடை செய்த எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் மரங்களிலேயே எலுமிச்சை பழங்களை பறிக்காமல் விட்டுள்ளனர். அவை தானாக கீழே விழுந்து கிடக்கின்றன. ஆண்டுக்கணக்கில் எலுமிச்சை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பராமரித்து வளர்த்த நிலையில், சீசன் நேரத்தில் பழங்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கொள்முதல் இல்லை

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில்தான் எலுமிச்சை பழம் சீசன் அதிகமாக இருக்கும். தற்போது ஊரடங்கு காரணமாக, புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான எலுமிச்சை பழங்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளோம். இதனால் பெரிதும் நஷ்டம் அடைந்து இருக்கிறோம். குடும்ப உறுப்பினர்களே எலுமிச்சை பழங்களை பறித்தாலும், அவற்றை வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

தற்போது எந்த விழாக்களும் நடைபெறாததால் எலுமிச்சை பழங்களின் தேவைப்பாடும் வெகுவாக குறைந்து விட்டது. எலுமிச்சை பழங்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்ய வரவில்லை.

நிவாரணம்

புளியங்குடியில் குளிர்பதன கிட்டங்கி, எலுமிச்சை ஆராய்ச்சி மையம், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்றவை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், எதுவும் அமைக்கப்படாததால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story